வந்து போனவர்கள்

புதன், 14 டிசம்பர், 2011

பிளாஸ்மாவை பற்றி உங்களுக்கு தெரியுமா?


பிளாஸ்மா என்பது இயற்பியல் பொருளின் நான்காவது நிலை. திடப்பொருளைச் சூடாக்கினால் திரவப் பொருளாகிறது. அதை மேலும் சூடுபடுத்தினால் ஆவியாகிறது. அதாவது, வாயுப் பொருளாகிறது. அந்த வாயுவை மேலும் சூடுபடுத்தினால் என்ன ஆகும்?
வாயுவில், அணுக்களும், மூலக்கூறுகளும்
கட்டுப்பாடின்றித் திரிகின்றன. அந்த வாயுவை மேலும் சூடுபடுத்தும்போது அதில் உள்ள அணுக்களும், மூலக்கூறுகளும் தறிகெட்டு ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக்கொண்டு ஓடுகின்றன. அவ்வாறு அவை மோதும்போது அணுக்களில் அடங்கியுள்ள துகள்கள் சிதறிப் பரவுகின்றன. சில அணுக்கள் எலக்ட்ரான்களை இழக்கின்றன. சில, ஏற்கின்றன.
அணுக்கள் மின்னூட்டமில்லாதவை. எதிர்மின்னூட்டம் உடைய எலக்ட்ரான்களை இழக்கும் அணுக்கள், நேர்மின்னூட்டம் உடைய புரோட்டான்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் நேர்மின்னூட்ட அயனிகளாக மாறிவிடுகின்றன. அதேபோல் எதிர்மின்னூட்டமுள்ள எலக்ட்ரான்களை ஏற்கும் அணுக்கள், எலக்ட்ரான்களின் அதிக எண்ணிக்கை காரணமாக எதிர் மின்னூட்டமுடைய அயனிகளாக மாறிவிடுகின்றன.
பிளாஸ்மாவில், எலக்ட்ரான்களும், நேர் மின்னூட்டம் உடைய அயனிகளும், எவ்வித மின்னூட்டமும் இல்லாத அணுக்களும் அடங்கியுள்ளன. பொதுவாக பிளாஸ்மாவை, மிக உயர்ந்த வெப்பநிலையில் அயனிகளாக மாறிய வாயு அணுக்களின் தொகுதி என்று சொல்லலாம். பொருள்களின் மற்ற நிலையில் இருந்து இது வேறுபட்டு நிற்பதன் காரணம், இத்தொகுதியில் மின்புலமும் அடங்கியுள்ளது. காந்தப்புலமும் அடங்கியுள்ளது. தவிர இத்தொகுதியில் இடைவிடாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடுவினைச் செயல்களும் இந்த பிளாஸ்மாவை தனியாகப் பிரித்துக் காட்டுகின்றன.
மிக உயர்ந்த வெப்பநிலையில் பிளாஸ்மா உண்டாகிறது. அணு ஆற்றலை மின் ஆற்றலாகப் பயன்படுத்த அணுப்பிளப்பு உலைகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதைவிட, அணுப்பிணைப்பு மூலம் அதிக ஆற்றலைப் பெறலாம் என்ற கருத்து, இத்துறையில் ஆய்வாளர்களைக் கவனம் செலுத்தத் தூண்டியது.
அணுப்பிணைப்பு என்றால், அணுக்கருவை மிக அதிக வெப்பநிலையில் உருகச் செய்து பிணைப்பது. அப்போது வெளியாகும் ஆற்றலை மின்னாற்றலாகப் பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் பிளாஸ்மாவின் மீது கவனம் திரும்பியது.
மிக உயர்ந்த வெப்பநிலையில் உண்டாகும் இந்தப் பிணைப்பைக் கட்டுப்படுத்தி செயல்முறைக்குக் கொண்டு வந்துவிட்டால், மின்னாற்றலைத் தங்கு தடையின்றிப் பெறலாம். அந்த முயற்சியின் நுழைவாயில்தான் பிளாஸ்மா. எனவேதான் தற்போது உலகெங்கும் இதன் மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More