மீன்களின் உணவுப்பழக்கம் வித்தியாசமானது. ஒவ்வொரு வகையான மீனும் உணவு உட்கொள்வதில் ஒவ்வொரு முறையைக் கடைப்பிடிக்கின்றன. இருந்தாலும், அவற்றை வகைப்படுத்தி, 5 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர், ஆராய்ச்சியாளர்கள்.
1. பகை மீன்கள்
இவை, பெரிய விலங்கினங்களைப் பிடித்து உண்ணுபவை. அதற்கு ஏற்ப பிடிக்கவும், கடிக்கவும் இவை பற்களைப் பெற்றுள்ளன. சுறா, பராக்குடா, பைக் போன்ற மீன்கள் இவற்றைச் சேர்ந்தவை. இந்த மீன்களுக்கு முறையான வயிறு என்ற அமைப்பு உண்டு. அதில், அமிலங்களும் சுரக்கின்றன. இருந்தாலும், இவற்றின் குடல் தாவர உண்ணிகளுக்கு இருப்பதைவிடச் சிறியதாக இருக்கும். போமட்டோமஸ் மீன், தன்னுடைய உணவை வேட்டையாடிப் பிடிக்கும்.
எப்பிநேப்பிலஸ் என்னும் கலவா மீன் இனங்கள், இரை வரும்வரை காத்திருந்து, வந்ததும் அவற்றைப் பிடித்து உண்ணும். ஆங்கிளர் மீன், தன்னுடைய உடலில் ஒளியை ஏற்படுத்துவதன் மூலம் இரையைக் கவர்ந்து பிடிக்கும். ஆர்ச்சர் மீன், தாவரங்களில் உள்ள பூச்சிகளை, சுடுவது போல எச்சிலைத் துப்பி பிடிக்கும். நீருக்கு வெளியிலும் தெளிவாகப் பார்க்கும் கண் அமைப்பு இந்த மீனுக்கு உண்டு. இந்தக் கண்கள் தான் இரையைப் பிடிக்க உதவுகின்றன.
2. மேயும் மீன்கள்
ஆடு, மாடுகள் போல சில மீன்கள் உணவைக் கடித்து, மேய்ந்து உண்ணும். இவற்றுக்கு நுண்ணுயிர் மிதவைகளும், நீருக்கு அடியில் காணப்படும் உயிரினங்களும் உணவாக அமைகின்றன. கிளி மீன்களும், பட்டர்பிளை மீன்களும் பவளப்பாறைகளில் உள்ள பாலிப்புகளை (Polyps) கடித்து, மேய்ந்து உண்ணுகின்றன.
3. வடித்து உண்ணும் மீன்கள்
நீரில் உள்ள நுண்ணுயிர் மிதவைகளையும், சிறிய உணவுகளையும் தன்னுடைய செவுள்களால் வடித்து இந்த மீன்கள் உண்ணுகின்றன. களுப்பியாய்ட், மென்ஹேடன் போன்ற மீன்கள் இந்த முறையில் தான் உண்ணுகின்றன. நன்னீரில் வாழும் கட்லா, ரோகு, வெள்ளிக்கெண்டை போன்றவையும் இப்படித்தான் உண்ணுகின்றன.
4. உறிஞ்சி உண்ணும் மீன்கள்
உணவை வாயால் உறிஞ்சி உண்ணும் மீன்களும் உள்ளன. நீருக்கு அடியில் உள்ள உணவுகளை உண்ணும் மீன்களான ஸ்டர்ஜியன் மற்றம் உறிஞ்சி மீன்களில் இந்த உணவுமுறை காணப்படுகிறது.
5. ஒட்டுயிர் முறையில் உண்ணும் மீன்கள்
தான் ஒட்டி வாழும் மீன்களின் உடலில் காயத்தை ஏற்படுத்தி, அதன் வழியாக அந்த மீன்களின் உடலில் உள்ள திரவத்தை உறிஞ்சி உண்ணுகின்றன. ஆழ்கடலில் உள்ள விலாங்கு மற்றும் விளக்கு மீன்கள், லேம்ப்ரேஸ், ஹாக் மீன்கள் போன்றவை இப்படித்தான் உண்ணுகின்றன.
0 comments:
கருத்துரையிடுக