தன்னுயிரை ஈந்து மற்றவர்களின் இன்னுயிரை காத்தவர்களை சரித்திரத்தின் வாயிலாக நாம் அறிவோம். தன்னுடைய கண்டுபிடிப்பை தனக்கே பயன்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டிய சாதனையாளரை அறிவியல் உலகம் அறியத் துவங்கியிருக்கிறது.
ரால்ப் ஸ்டெய்ன் மான்தான் அந்த சாதனையாளர். நோய் எதிர்ப்பு சக்தி (immune response) துறையில் இவரின் புரட்சிகரமான கண்டுபிடிப்பிற்காக இவ்வருட நோபல் பரிசு இவரைத் தேடி வந்துள்ளது. இத்தகைய மகிழ்வான தருணத்தில் நிகழ்ந்த அவருடைய மரணம் நம்மை வேதனையளிக்கும் ஒன்று.
கடந்த அரை நூற்றாண்டு கால அளவில் மரணமடைந்த சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கப்படுவது இதுவே முதல் முறை. நோபல் சரித்திரத்தில் இதுவரை இரண்டு பேருக்கு மட்டுமே மரணமடைந்தப் பின்னர் நோபல் பரிசளிக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கவிஞர் எரிக் ஆக்ஸல் காபெட் (இலக்கியம்- 1931). மற்றொ ருவர் ஐ.நா. சபையின் பொது செயலராக இருந்த டாக் ஹாமாஷெல்ட் (அமைதி 1961). கவிஞர் எரிக்கிற்கு 1919 ஆண்டு நோபல் பரிசு கொடுக்கவிருந்தபோது அதை நிராகரித்து விட்டார். அவருடைய மரணத்திற்கு பின்னர் 1931-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் இதுவே அண்மையில் மரணத்திற்கு பின் கொடுக்கப்பட்ட நோபல் பரிசாகும்.
டாக் ஹாமாஷெல்ட் நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்ட பின்னர் 1961 செப்டம்பர் 18-ஆம் தேதி விமான விபத்தில் மரணமடைந்தார். இரு வாரங்கள் கழித்து சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974-ஆம் ஆண்டு நோபல் பரிசுக் குழு மரணமடைந்த சாதனையாளருக்கு பரிசு வழங்கத் தேவையில்லை என்று முடிவெடுத்தது. ஆனால் ரால்ப் ஸ்டெய்ன் மான் செப்டம்பர் 30-ஆம் தேதி (2011) மறைந்தது வெளி உலகிற்கு தெரியவில்லை. நோபல் கமிட்டி பரிசிற்கு தேர்ந் தெடுக்கவும் செய்துள்ளது. உண்மையில் அவருடைய உழைப்பிற்கும் நல்லெண்ணத் திற்கும் கிடைத்த பரிசு இது. இவ்வருட மருத்துவத்திற்கான பரிசினை ஸ்டெய்ன் மான், புரூஷ் ஏ பியூட்லர் மற்றும் ஜூல்ஸ் எ ஹோப்மான் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார். பரிசு தொகையான ஏழரை கோடி ரூபாயில் பகுதி ஸ்டெய்ன் மானுக்கும் மீதி பகுதி தொகை மற்ற இருவருக்கும் பகிர்ந்தளிக்கப் படுகிறது.
நோய் எதிர்ப்பு அமைப்பு
நாம் பாதுகாப்பற்ற உலகில் வாழ்கின்றோம். இவ்வுலகில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணியிரிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. நமது உடல் பல்வேறு வகையான நோய் கிருமிகளாலும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது. நோய் கிருமிகளால் தாக்கப்படுவதனை தடுப்பதற்காக நம் உடல் நோய் எதிர்ப்பு அமைப்பினைக் (immune System) கொண்டுள்ளது. இவ்வமைப்பு இருவேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இயல்பு நோய் எதிர்ப்பு அமைப்பு (Innate (or) Non- specific immune system) மற்றும் பெற்றுக்கொண்ட (அ) பொருந்தக் கூடிய நோய் எதிர்ப்பு அமைப்பு (Adaptive (or) specifi immune system).
உடலில் நோய்கிருமிகள் நுழையும்போது முதலில் பாதுகாக்க வருவது இயல்பு நோய் எதிர்ப்பு அமைப்பு. இது கிருமிகளை அழிப்பதில் தோல்வியுறும்போது பொருந்தக்கூடிய நோய் எதிர்ப்பு அமைப்புதன் செயல்களை முடுக்கி விடுகிறது. இதன் மூலம் அந்நோய்கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சியை நோய் எதிர்ப்பு மண்டலம் நெடுநாளைக்கு நினைவில் வைத்துக்கொள்கிறது. இரண்டாவது முறை அதேநோய் கிருமி தாக்கும்போது, அதனை அறிந்து தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கையை நோய் எதிர்ப்பு அமைப்பு மேற் கொள்கிறது. ஆனால் இயல்பு நோய் எதிர்ப்பு அமைப்பு மேற்கொள்ளும் நோய் கிருமி அழிப்பு செயல்கள் நினைவில் வைத்துக் கொள்ளப் படுவதில்லை.
நோய்கிருமிகள் உடலில் நுழைந்தவுடன் அதனை உணர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் (Sensors) தேடித்தான் அறிவியலர்கள் நெடுங் காலமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். புருஸ் பியூட்லர் மற்றும் ஜுல்ஸ் ஹோப்மான் ஆகிய இருவரும் ரிஸிப்டர் புரதம் (ஏற்பு புரதம்) என்னும் புரதம்தான் நோய்கிருமிகள் உள்ளே நுழைந்தவுடன் அதனை அடையாளம் கண்டுகொண்டு இயல்பு நோய் எதிர்ப்பு அமைப்பை (முதற்கட்ட பாது காப்பு) செயல்படச் செய்கிறது என்பதனைக் கண்டறிந்தனர். ரால்ப் ஸ்டெய்ன்மான் நோய் எதிர்ப்பு அமைப்பிலுள்ள டென்ட்ரிக் செல் களையும் (Dentric cells), பொருந்தக் கூடிய நோய் எதிர்ப்பு அமைப்பினை தூண்டவும், கட்டுப் படுத்தவும் செய்யும் டென்ட்ரிக் செல்களின் அபூர்வ ஆற்றலையும் கண்டுபிடித்தார். இம் மூன்று அறிவியலர்களின் கண்டுபிடிப்புகள் இயல்பு மற்றும் பொருந்தக்கூடிய நோய் எதிர்ப்பு அமைப்பு எவ்வாறு தூண்டப்படுகிறது என்ப தனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும் பல்வேறு வகையான தொற்றுநோய், புற்றுநோய் வீக்கம் போன்ற நோய்களுக்கு தடுப்பு மற்றும் சிகிச்சை ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு வழிவகை செய்துள்ளது.
நுண்கிருமிகள் முதற்கட்ட பாதுகாப்பை உடைத்தெறிந்தவுடன் பொருந்தக்கூடிய நோய் எதிர்ப்பு தூண்டப்பட்டு, செயல்பட விழைகிறது. அதனுள் இருக்கும் T (தைமிக்) மற்றும் B செல்களுடன் எதிர்பொருள்கள் (Antibody) மற்றும் கொலைகார செல்கள் (Killer cells) உற்பத்தி செய்யப்பட்டு நுண்கிருமிகள் அழிக்கப்படுகிறது.
20-ஆம் நூற்றாண்டிலிருந்து நோய் எதிர்ப்பு அமைப்பின் பகுதி பொருட்கள் படிப்படியாக கண்டறியப்பட்டு வருகிறது. எவ்வாறு எதிர்பொருட்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் எவ்வாறு T செல்கள் நுண்ணுயிரிகளை அடையாளம் காண்கின்றன என்பவை ஆராய்ச்சி யாளர்களால் வெளிப்படுத்தப்பட்டன. ஆனால் இயல்பு நோய் எதிர்ப்பு அமைப்பின் தூண்டுதலை முடுக்கிவிடும் நுட்பம் மற்றும் இயல்பு, பொருந்தக்கூடிய ஆகிய இவ்விரு அமைப்பு களுக்கிடையான தகவல் பரிமாற்றம் நடை பெறும் நுட்பம் ஆகியவை இதுவரை புரியாத புதிராக இருந்து வந்தது. இதனைக் கண்டறிந்து வெளிப்படுத்தியவர்கள் இம்மூவரே.
இயல்பு நோய்எதிர்ப்பு அமைப்பின் உணர்விகள் (Sensors) கண்டுபிடிப்பு:
பழப்பூச்சிகள் எவ்வாறு தொற்று நோய்களை முறியடிக்கிறது என்பதனை ஜுல்ஸ் ஹாப்மான் ஆராய்ந்தார். இதற்காக பூச்சிகளின் ஜீன்களுடன் பல்வேறு வித்தியாசமான ஜீன்களை மாறுதலுக்கு உட்படுத்தினார். அதில் டோல் ஜீன் (Toll) என்னும் கரு உருவாக்கத்தில் ஈடுபடும் ஜீனும் உட்படும். பழப்பூச்சிகளுக்கு பாக்டீரியா மூலம் நோய் ஏற்பட செய்தபோது டோல் ஜீன் இறந்து விட்டது. இதன் காரணம் அதனால் சரியான பாதுகாப்பு (அ) நோய் எதிர்ப்பினை உருவாக்க முடியாமல் போனதேயாகும். இதன் மூலம் டோல் ஜீன் உற்பத்தி செய்யுட் பொருள் உள்ளே நுழையும் கிருமிகளை (நுண்ணுயிரி) உணர்ந்து கொள்வதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதனை கண்டறிந்தார். மேலும் நோய் கிருமிகளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டுமெனில் டோல் ஜீனினை தூண்டுவது அவசியம் என்று கண்டறிந்தார்.
உடலின் உள்ளே நுழையும் பாக்டீரியாக்கள் லிபோ பாலி சாக்ரைடு (LPS- Lipopolysaccharide) என்னும் வேதிப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதனால் புரையோடிப்போவதால் உருவாகும் புரை அதிர்ச்சி (Septic shock) மிகவும் அபாய கரமானது. இதனை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகமாக தூண்டப்படும். லிபோ பாலி சாக்ரைடு பிணைத்து செயலிழக்கச் செய்யும் ஏற்பி (Receptor) கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. லிபோ பாலி சாக்ரைடு தடை செய்யும் மாறுதல் (Mutation) எலிகளின் ஜீன்களில் நடைபெறுவது கண்டறியப்பட்டது. இது பழப் பூச்சியிலுள்ள டோல் ஜீன்களை ஒத்திருந்தது. இந்த டோல் போன்ற ஏற்பிகள் (Toll- Like Receptor-TLR) லிபோ பாலி சாக்ரைடை செயல்படவிடாமல் தடுத்துவிடுகிறது. மேலும் அதனை பிணைத்து வைக்கும் போது சமிக்ஞை தூண்டப்பட்டு வீக்கத்தினை மட்டும் ஏற்படுத்துகிறது. இக்கண்டுபிடிப்பின் மூலம் பாலூட்டிகளும் பழப்பூச்சிகளும் நுண்கிருமிகளால் பாதிக்கப் படும்போது ஒரே மாதிரியான மூன்று மூலக் கூறுகள் முதலில் இயல்பு நோய் எதிர்ப்பு அமைப்பினை தூண்டுகின்றன என்பது தெரிய வந்தது. மேலும் இயல்பு நோய் எதிர்ப்பு அமைப் பினைத் தூண்டும் உணர்விகள் (Sensors) கண்டறியப்பட்டன. தற்போது மனிதர்களிலும் எலிகளிலும் சுமார் ஒரு டஜன் டோல் போன்ற ஏற்பிகள் (TLR) கண்டறியப்பட்டுள்ளன.
பொருந்தக்கூடிய நோய் எதிர்ப்பு அமைப்பினை கட்டுப்படுத்தும் புதிய செல் ரால்ப் ஸ்டெய்ன் மான் 1973-இல் ஒரு புதிய செல்வகையை கண்டுபிடித்து அதற்கு டென்ட்ரிக் செல் என்று பெயரிட்டார். இச்செல்கள் நோய் எதிர்ப்பு அமைப்பில் முக்கிய பங்குவகிக்கும் என்று உணர்ந்த ஸ்டெய்ன் மான், இவை பலிசெல்களை செயல்பட செய்யுமா என்பதனை அறிய ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த T- செல்கள்தான் பொருந்தக்கூடிய நோய் எதிர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு மட்டுமின்றி பல்வேறு நுண்கிருமிகளை அழிக்க மேற்கொள்ளும் செயல்களை நினைவில் வைத்துக்கொள்ளக் கூடியவை. செல்கல்சர் (Cell culture) சோதனைகளின் மூலம், டென்ட்ரிக் செல்கள் இருப்பதன் விளைவாக பலி செல்கள் நோய்கிருமிகள் நுழையும்போது தெளிவான பிரதிபலிப்பை ஏற்படுத்துகின்றன.
இக்கண்டுபிடிப்பு தொடக்கத்தில் சந்தேகத்தை வரவழைத்தது. ஸ்டெய்ன் மானின் இடைவிடாத சோதனைகள் மூலம் டென்ட்ரிக் செல்கள் T- செல்களை தூண்டும் அபார ஆற்றலைப் பெற்றுள்ளன என்பதை நிரூபித்தார்.
நோய் கிருமிகள் நம்மை வேட்டையாட விழையும்போது, பொருந்தக்கூடிய நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்பட வேண்டுமா இல்லையா என்பது இயல்பு நோய் எதிர்ப்பு அமைப்பு (தன்னால் கட்டுப்படுத்த முடியாத போது) சில சிக்னல் (சமிக்ஞை)களை உண்டாக்குகிறது. இந்த சிக்னல்கள் டென்ட்ரிக் செல்களால் உணரப்பட்டு, T-செல்கள் தூண்டப்படுகின்றன.
இக்கண்டுபிடிப்புகள் மூலம் பல்வேறு தொற்று நோய்களை தடுக்க நவீன தடுப்பு மருந்துகள் பயன்படுத்தும் டியூமர் போன்ற கொடிய நோய்களுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியினை தூண்டிவிடவும் பயன்படும்
0 comments:
கருத்துரையிடுக