வந்து போனவர்கள்

புதன், 23 நவம்பர், 2011

சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியா சாதனை!

அளவு கடந்த வெப்பம், பனி, காலம் தவறிய தொடர்மழை, பூகம்பம், சுனாமி என்ற ஆழிப்பேரலை ஆகியவை, அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற இயற்கை பாதிப்பால், பல லட்சக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். குறிப்பாக சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், பல அப்பாவி உயிர்கள்
பறிபோகின்றன. கடந்த 2004ல், டிசம்பர் மாதம் இந்தோனேசியா அருகில், கடலுக்குள் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியாக உருமாறி, இந்திய கடற்கரை ஓரங்களை பலமாக தாக்கியது. இதில் இந்திய கடற்கரையோர மாவட்டங்களில் வசித்த, பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து, சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்துக் கொள்ள, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மத்திய அரசின் கடல் வளத்துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமான, "இந்தியன் நேஷனல் சென்டர் பார் ஓஷன் இன்பர்மேஷன் சர்வீஸ்' (இன்காய்ஸ்) மற்றும் இந்திய கடல் வளத்துறை தொழில் நுட்பக் கழகம் (என்.ஐ.ஓ.டி.,) ஆகியவை இணைந்து சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்துக் கொள்ளும் வகையிலான, ஒரு தொழில்நுட்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து, என்.ஐ.ஓ.டி., யின் இயக்குனர் ஆத்மானந்த் கூறியதாவது:சுனாமியை அறிய, கடலுக்குள், இந்தியாவை சுற்றி, குறிப்பிட்ட தொலைவில், ஐந்து இடங்களில், "பாட்டம் பிரஷர் ரெக்கார்டர்கள்' நிறுவப்பட்டுள்ளன. கடலில் ஏற்படும் பூகம்பத்தின் அதிர்வுகளையும், அதனால் ஏற்படும் அழுத்தத்தையும் பதிவு செய்யும். இத்தகவல்கள், கடலின் மேல் மட்டத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் "சுனாமிபாய்ஸ்' என்ற கருவிக்கு அனுப்பப்படும். அங்கிருந்து அனைத்து தகவல்களும் செயற்கைக் கோள் மூலம், அடுத்த ஏழு நிமிடங்களில், கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கும். கட்டுப்பாட்டு அறை, அத்தகவல்களை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும். அங்கிருந்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படும்.கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்த தொழில்நுட்பம் மூலம் தகவல்கள் பெறப்படுகின்றன. கடலில் ஏற்படும் அதிர்வுகளை, வரைபடங்களாக பெறப்படுகின்றன. அவற்றின் மூலம் சுனாமி தாக்குதலின் தன்மை குறித்து அறியப்படுகிறது. இன்றுவரை தவறான தகவல் ஒருமுறை கூட அளித்ததில்லை. மேலும், இந்தியாவை சுற்றி, கடலில் பொருத்தப்பட்டுள்ள "டேட்டாபாய்ஸ்கள்' மூலமாக தட்பவெட்ப நிலை குறித்த தகவல்களும் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவின் சுனாமி எச்சரிக்கை குறித்த புதிய தொழில்நுட்பத்தை, "இன்டர்நேஷனல் ஓஷயானோ கிராபிக் கமிஷன் ( ஐ.ஓ.சி.,)' அங்கீகரித்து, இந்தியாவை மண்டல சுனாமி எச்சரிக்கை மையமாக அறிவித்துள்ளது. மியான்மார், இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி குறித்த எச்சரிக்கைகளை, இந்தியா அளித்து வருகிறது. இந்திய கடலோரப் பகுதிகளில் சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்துக் கொள்ள முடியும். எனவே, இந்த தொழில்நுட்ப முறை மூலம், இந்தியாவில் சுனாமி அச்சம் அகற்றப்படுகிறது. விரைவில், மேலும் எட்டு இடங்களில் பாட்டம் பிரஷர் ரெக்கார்டருடன், சுனாமி பாய்ஸ் பொருத்தப்படும் பணி நடந்து வருகிறது. அரபிக் கடல் பகுதியில் சுனாமி பாய்ஸ்கள் பொருத்துவதில் கடற் கொள்ளையர்களால் சிக்கல் உள்ளது.இவ்வாறு என்.ஐ.ஓ.டி., இயக்குனர் ஆத்மானந்த் தெரிவித்தார்.

சுனாமி தகவல்களை தரும் "பாய்ஸ்' கருவி :சுனாமி "பாய்ஸ்' கருவி, என்.ஐ.ஓ.டி., மூலமாகவே அதிநவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடலில் மிதக்கும் தன்மை கொண்ட பொருட்களால் சுனாமி பாய்ஸ் உருவாக்கப்படுகிறது. ஒரு இயந்திரம் தயாரிக்க, 40 லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்திய கடலோரப் பகுதிகளை சுற்றி, ஐந்து இடங்களில், இந்த கருவி மிதக்க விடப்பட்டுள்ளது. கடலில் ஒரு சுனாமி"பாய்ஸ்' கருவி பொருத்துவதற்கு குறைந்த பட்சம், எட்டு மணி நேரமாகிறது.இதற்காக என்.ஐ.ஓ.டி.,யை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. "பாட்டம் பிரஷர் ரெக்கார்டர்களில் இருந்து தகவல் பெறும் சுனாமி "பாய்ஸ்' மிக முக்கிய பங்காற்றுகிறது. பாட்டரி மூலம் இயங்கும் இந்த சுனாமி பாய்ஸ்கள், ஆண்டிற்கு ஒரு முறை, சுழற்சி முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு முறை சர்வீஸ் செய்வதற்கு, ஒரு மாத காலம் ஆகும். ஒரு சுனாமி பாய்ஸ் பழுதடைந்தாலும் மற்ற கருவிகள் மூலம் தகவல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால், அதன் முக்கியத்துவம் தெரியாமல் சுனாமி பாய்ஸ் கருவியை, மீனவர்கள், அதன் மீது படகுகளை கட்டி சேதப்படுத்துகின்றனர். எனவே, "பாய்ஸ்'களை காப்பாற்றும் வகையில், மீனவர்களுக்கு அந்தந்த பிராந்திய மொழி மூலம், மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகின்றன.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More