வந்து போனவர்கள்

TAMIL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TAMIL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஜூலை, 2012

TNPSC தமிழ் இலக்கணம் - ஐந்திணை ஒழுக்கம்


ஐந்நிலப் பிரிவைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் ஒரு ‌பேராற்றை அதன் தொடக்கத்திலிருந்து இறுதிவரை தொடர்ந்து செல்ல வேண்டும். ஆறுகள் மலைகளில் தொடங்குகின்றன. முதலில் அவை நெருக்கமான அறுத்தோடிகள் எனப்படும் சிற்றோடைகளின் மூலம்
மழைநீரை அல்லது பனிக்கட்டி உருகிய நீரை மலையின் குத்துச் சரிவான பரப்பில் பெறுகின்றன. இத்தகைய சிற்றோடைகள் பல சேர்ந்து சிற்றாறுகளாக மலையடிவாரத்தை அடைகின்றன.  இந்நிலப் பகுதியே குறிஞ்சி நிலமாகும். இங்கு மழைக்காலம் நின்ற பிறகும் மழையின் போது மலையினு‌ள் இறங்கியிருக்கும் மழைநீரின் கசிவால் சிற்றோடைகளில் நீரோட்டம் இருக்கும். எனவே மலைப்பகுதி நீர்வளத்தில் சிறந்திருக்கும்.

மலைய‌டிவாரத்தில் நல்ல சரி‌வுடனிருக்கும் நிலத்தில் மலையைக் கடந்து வரும் சிற்றாறுகள் பாறைகளாகிய தடைகளால் தடுக்கப்ப‌ட்டு ஏறக்குறைய மேல் மட்டத்திலேயே ஒன்றுக்கொன்று பெரும் இடைவெளியின்றி ஓடும். இப்பரப்பில் பெருமரங்களும் செழிப்பான புல்வெளிகளும் தழைக்கும் அளவுக்கு நீர்வளம் இருக்கும். இது முல்லை நிலம்.

முல்லை நிலம் முடியும் இடத்தில் இச்சிற்றாறுகள் பல இணைந்து பேராறுகள் உருவாகும். இப்பேராறுகள் ஒன்றுக்கொன்று பெருந்தொலைவில் இருக்கும். அத்துடன் அவை நில மட்டத்துக்குக் கீழே ஓரளவு ஆழத்தில் ஓடும். இந்தப் ‌பேராறுகளுக்கிடைப்பட்ட நிலத்துக்கு ஆற்றில் ஓடும் நீர் கிடைப்பதில்லை. மலையிலிருந்து தொலைவாகிவிடுவதால் மழையும் குறைவாகவே இருக்கும். இங்கே பாலை நிலம் உருவாகிறது.

ஆற்று நீர் விரைந்து ஓட முடியாமல் நிலம் தட்டையாக மாறுமிடத்தில் பாலை நிலம் முடிந்து மருத நிலம் தோன்றுகிறது. இங்கு ஆற்று மட்டம் உயர்ந்‌து விடுகிறது. பெருவெள்ளங்களின் போது ஆறு கரைபுரண்டு கிளையாறுகளையும் புதிய பாதைகளையும் ஏற்படுத்துகிறது. பழைய பாதைகள் அடைபட்டு இயற்கை ஏரிகள் உருவாகின்றன. ஆற்று நீரில் வந்த வண்டல் படிகிறது. நிலமட்டம் மேலும் உயர்கிறது. ஆறு தாறுமாறாக ஓடுகிறது. இவ்வாறு இங்கு நீர்வளமும் நிலவளமும் கொழிக்கின்றது.

ஆறு கடலை நோக்கிச் செல்லும் ‌போது கடலலைகளால் ஒதுக்கப்பட்ட மணல் திட்டுகள் அவற்றைத் தடுக்கின்றன. ஆறு தேங்குகிறது. எங்காவது ஓரிடத்தில் உடைத்துக் கொண்டு ஆற்று நீர் கடலுடன் கலக்கிறது. கடல் நீர் ஆற்றினுள்ளும், ஆற்று நீர் கடலினுள்ளும் மாறிமாறிப் பாய்கின்றன. பெரும் காயல்களும் உப்பங்கழிகளும் தோன்றுகின்றன. ‌நெய்தல் நிலம் இது தான்.

ஐந்திணைப் பாகுபாடு எங்கு தோன்றியிருக்க வேண்டும்:

இத்தகைய ஐந்நிலப் பிரிவு முழுமையாக இடம் பெற வேண்டுமாயின் ஆறு தோன்றும் மலைக்கும் அது கலக்கும் கடலுக்கும் இடையில் குறிப்பிட்ட தொலைவு இருக்க வேண்டும் இன்னும் குறிப்பாக முல்லை நிலம் முடிவதற்கும் மருத நிலம் தொடங்குவதற்கும் இடையில் குறிப்பிட்ட தொலைவு வேண்டும். எடுத்துக்காட்டாக கங்கையாறு 2400 கி.மீ. நீளமிருந்தும் அதன் வடக்கே இமய மலையும் தெற்கே விந்திய, சாத்புர மலைகளின் கிழக்கு நோக்கிய தொடர்ச்சியும் மேற்கே ஆரவல்லி மலைகளும் ஆற்றை நெருக்கி நிற்கின்றன. அதனால் ஆற்றுக்கும் மலைகளுக்கும் இடையில் பாலை தோன்ற இடமின்றி அடர்த்தியான காடே இருந்தது. இந்த அடர்த்தியான காட்டையழித்து ‌வேளாண்மை செய்ய இரும்புக் கருவிகள் தோன்றிய பின்னரே இயன்றது. அதனால் கங்கைச் சமவெளியில் மக்கள் குடியேற்றம் பிற பகுதிகளை விட காலத்தாழ்த்தியே இடம் பெற்றது. இது வரலாற்றாசிரியர்கள் கூற்று.

மாறாக நீலாறு, யூப்பிரடிசு-டைகரீசு, சிந்தாறு போன்றவற்றில் இடையில் பாலை நிலம் இருந்ததால் பாலையும் மருதமும் மயங்கும் இடைநிலத்தில் அடர்த்தியில்லாத மென்காடுகளில் பழம் பெரும் நாகரிகங்கள் தோன்றிச் செழித்தன.

இன்றைய தமிழகத்தில் மலையடிவாரங்களிலிருந்து மருத நிலத்துக்குள்ள தொலைவு மிகக் குறைவு. இதனால் இங்கு பேராறுகளும் இல்லை, தனியான பாலை நிலமும் இல்லை. விரிவான மருத நிலம் காவிரிக்கு மட்டுமே உள்ளது. இவ்வாறு தனியான பாலை நிலம் இன்மையால் பொருளிலக்கணத்ததில் கூறப்படும் ஐந்திணைப் பண்பாடும் அதற்குரிய ஐந்நிலப் பகுப்பும் இன்றைய தமிழகத்துக்கு உரியதல்ல. நாம் ஏற்கனவே கூறியது போல் இந்த ஐந்திணைப் பாகுபாட்டுக்குரிய தடயங்கள் உலகின் வேறு நாகரிகங்கள் எவற்றிலும் காணப்படாமையால் இது தோன்றிய இடம் கடலில் முழுகியதாகத் தமழிகத்தில் நீண்ட நெடுங்கால மரபாக இடம் பெற்றுள்ள குமரிக் கண்‌டமே என்று முடிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

பலர் எழுப்பும் ஒரு கேள்வி மட்டும் எஞ்சி நிற்கிறது. முல்லையும் குறிஞ்சியும் திரிந்து பாலை எனும் படிவம் கொள்ளும் என்ற வகையில் இந்தக் கருத்து உருவாகியிருக்கக் கூடாதா என்ற கேள்வி தான் அது. தனியாக ஒரு நிலப்பரப்‌பில்லாத நிலையில் கோடையின் திரிபாகப் பாலையைக் கொள்வதற்குப் பகரம் இவை இரண்டின் இயற்கை இயல்பாகப் பாலைத் தன்மை கொள்ளப்பட்டிருக்குமேயன்றி ஒரு தனி நிலப்பரப்புக்குரிய பண்பாகக் கூறப்பட்டுப் பாலை தனியாகப் பிரிக்கப்பட்டிருக்காது.

மனிதன் பருப்பொருளான உலகிலிருந்தே தன் கருத்துக்களைப் பெறுகிறான். அவ்வாறு முதனிலையில் பருப்பொருட்களிலி‌ருந்து பெறப்பட்ட கருத்துக்கள் ஒன்றோடொன்று வினைப்பட்டு பருப்பொருளியற்கையில் இல்லாத இரண்டாம் நிலை கருத்துகளும் கற்பனையும் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் இரண்டாம் நிலைக் கருத்துகளிலிருந்து அறிவியலும் புதுப்‌புனைவுகளும் மாயைகளும் உருவாகின்றன.

மனிதச் சிந்தனை பற்றிய மேலே கூறிய அறிவியற் கருத்தின் அடிப்படையில் நோக்கினால் ஐந்திணைப் பண்பாட்டை உருவாக்கிய மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தில் இருந்த உண்மையான நிலைமைக்கொப்ப ஐந்திணைக் கோட்பாட்டை உருவாக்கினர். அந்த இடத்திலிருந்து புதிய நிலப்பரப்புக்கு வந்த பின்னரும் அவர்கள் தங்கள் பழைய கருத்தைக் கைவிடாமல் புதிய இடத்தில் கையாண்டனர். இருந்த உண்மை நிலையை எடுத்துக் கூறிய தொல்காப்பியர் ′′நடுவண தொழிய′′ என்று கூற வேண்டியதாயிற்று. இந்த முரண்பாட்டை நீக்க முனைந்த இளங்கோவடிகள் இங்கு நிலவிய நிலையினடிப்படையில் ஒரு ‌தீர்வைக் கூறினார். இன்றைய தமழிகத்‌தின் நிலத்தன்மை இதற்‌கு மிகப் பொருந்துகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான முகடு தமிழகத்தின் மேற்கெல்லையாக அமைந்துள்ளது. இந்த முகட்டுக்கு மேற்கே உள்ளதைப் போல் தமிழகத்து மலைப்பகுதி பன்மலை அடுக்கம் உள்ளதாக இல்லை. எனவே இங்கு மழைக்காலத்தில் பெருமளவில் மலையினுள் நீர்பிடித்து வைக்கப்படுவதில்லை. எனவே இங்கு த‌‌மிழகத்தின் குறிஞ்சிப் பகுதியும் முல்லைப் பகுதியும் ஏறக்குறைய அரைப்பாலைவன நிலையிலேயே உள்ளன. இந்தத் தன்மையும் இளங்கோவடிகளின் கருத்து உருவாவதற்குக் காரணமானது.

இளங்கோவடிகள் குமரிக் கண்டம் முழுகியதை அறிந்திருந்தும் மனக்குமுறலுடன் அதை நமக்குக் தெரிவித்திருந்தும் பாலைத் திணையின் முரண்பாட்டை குமரிக் கண்டம் முழுகியதுடன் இணைத்துப் பார்க்காததே இந்‌தத் தீர்வை மேற்கொண்டதன் காரணமாகும்.

பாலைத்திணை விடு(வி)க்கும் மிகப் பெரிய புதிர்:

பாலைத் திணை தன்னகத்தே கொண்டுள்ள புதிர் ஐந்தினைக் கோட்பாடு தோன்றிய இடத்தைப் பற்றிய கேள்விக்கு ம‌ட்டும் விடை காணும் திறவு கோலாக இல்லை. ஐந்தினைக் கோட்பாட்டின் உள்ளடக்கம் என்ன என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இது எவ்வாறு?

இன்று உரையாசிரியர்களைப் பின்பற்றி நாம் ஐந்திணை உரிப்பொருள்களுக்குத் தரும் விளக்கம் பின்வருமாறு:

குறிஞ்சி : புணர்தல்
முல்லை : பிரிவை ஆற்றி இருத்தல்
பாலை : பிரிதல்
மருதம் : பிரிவிற்காக ஊடல்
நெய்தல் : பிரிவை நினைத்து இரங்கல்

இவற்றைத் தொகுத்தால் நமக்குக் கிடைப்பவை இரண்டே திணை உறவுகள் தாம்; ஒன்று புணர்தல் இன்னொன்று பிரிதல். ஆனால் உண்மை அது தானா என்ற ஐயத்தை எழுப்புவது பாலைத் திணை.

பிரிவு இருவகைப்படும் என்கிறது தொல்காப்பியம்.

அவை உடன்போக்கும் தலைவியைத் தலைவன் பிரிதலும் எனவும் கடல் வழிப் பிரிவும் நிலவழிப் பிரிவும் எனவும் வெவ்வேறு உரையாசிரியர்கள் கூ‌றியுள்ளனர். ஆனால் இத்தகைய ஐயத்திற்கிடமின்றி

கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவன் இரங்கலும்
உ‌‌ண்டென மொழிப ஓரிடத்‌தான

என்று தொல்காப்பியர் தெளிவுபடுத்திவிட்டார்.

அவ்வாறாயின் உடன்போக்கும் பிரிவு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது புலனாகிறது. தலைவ‌ன் தலைவியைப் பிரியாதபோதும் பிரிவு எனும் கருத்துப்‌ பெறுமாயின் உண்மையில் அந்தப் பிரிவு எதைக் குறிக்கிறது? யார் யாரை அல்லது எதனைப் பிரிவதைப் பிரிவென்று பொருளிலக்கணம் குறிக்கிறது? இதைத் தடம்பிடித்துச் சென்றால் பொருளிலக்கணம் கூறும் ஐந்திணை ஒழுக்கம் குறி‌ப்பது ஒரு தலைவனையும் தலைவியையும் மட்டும் பற்றியதல்ல, முழுக் குமுகத்தையும் பற்றியதென்பது புலப்படும். பிரிவு என்பது தலைவன் தலைவியைப் பிரிவதை மட்டுமல்ல, அவர்கள் இருவரும் தாம் வாழும் குமுகத்தையும் தம் நிலத்தையும் விட்டுப் பிரிவதையும் குறிக்கிறது. இந்தப் புலனத்திலிருந்து நாம் இப்போது ஐந்திணை ஒழுக்கம் எதைக் குறிக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்கு மானிடவியல் எனப்படும் மாந்தநூல் நமக்குத் துணை செய்யும்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

TNPSC தமிழ் இலக்கணம் - தமிழர் நிலத் திணைகள்


பண்டைத் தமிழர் தமது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்களாகும். இவை ஐந்து வகைகளாகப் பகுக்கப்பட்டன. முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்பனவே தமிழர் நிலத்திணைகள் ஆகும்.

  1. காடும், காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை
  2. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை
  3. இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை எனப்பட்டது.
  4. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் எனவும்,
  5. கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.

இது வெறுமனே இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.

நானிலம்

தமிழ்நாட்டில் பாலை என்று ஒரு நிலம் இல்லை. கோடை வெப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிலையில் அவற்றைப் பாலை என்றனர்.

சனி, 14 ஜூலை, 2012

TNPSC தமிழ் இலக்கணம் - அளபெடைகள்


"அ", "இ", "உ" போன்ற உயிரெழுத்துக்கள் சொல்லின் நடுவிலும் கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வருமெனில் அவையே அளபெடையென்று வழங்கப்படுகிறது. அளபெடை இருவகைப் படும். அவை உயிரளபெடை, ஒற்றளபெடை என்பவை.

மாணவர்களுக்கு தேர்வுக்கு எளியவழி: அளபெடை உள்ள சொல்லை நோக்குக.
(1) "இ" இல் முடிந்தால் அது சொல்லிசையளபெடை
(2) இல்லையேல் அசை பிரித்துப் பார்க்கையில், ஆயின் செய்யுளிசை; மூவசையாயின் இன்னிசை. மிகக் குறைந்த சொற்களை விடுத்து பெரும்பாலும் இவ்வழி சரியாகவே இருக்கும்:-
உயிரளபெடை:
          செய்யுளில் ஓசை குறையும்போது உயிரெழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள் தம்மளவில் நீண்டு ஒலிப்பது உயிரளபெடை. செய்யுளில் அளபெடுப்பதால் இஃது செய்யுளிசை அளபெடை எனவும் அழைக்கப்படும். உயிரெழுத்துக்களில் நெட்டெழுத்துக்கள் ஏழுமே அளபெடுக்கும். எந்த நெட்டெழுத்து அளபெடுக்கிறதோ அதன் இனமான குற்றெழுத்து அதன்பக்கத்தில் வரிவடிவில் அடையாளமாக எழுத்தப்படும். காட்டு:- ஓஒதல், உழாஅர். இனவெழுத்துக்கள்:- என்பதாகும். உயிரளபெடை மூன்று பிரிவுகளையுடையது. அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசையளபெடை, சொல்லிசையளபெடை என்பவையாம்: -

                                                      1.            செய்யுளிசை அளபெடை:
          செய்யுளில் ஓசை நிறைவு செய்வதற்காக செல்லின் முதல், இடை, கடை மூவிடத்தும் அளபெடுத்து வரும்.
எளியவழி:
(1) "இ" எனும் உயிரெழுத்து தவிர எனைய உயிரெழுத்து அச்சொல்லில் இருக்கும்.
(2) சொல்லைப் பார்க்கின் அது ஈரசைச் சீராக இருக்கும்.
(உ-ம்) "ஓஒதல் வேண்டும்", "உழாஅர் உழவர்", "படாஅ பறை"
                                                      2.            இன்னிசை அளபெடை:
          செய்யுளில் செவிக்கு இனிய ஓசை தரும்பொருட்டு குற்றெழுத்து நெடிலாகி அளபெடுப்பது இன்னிசையளபெடையாம்.
எளியவழி
(1) அளபெடுக்குஞ் சொல்லில் "உ" எனும் உயிரெழுத்து இருக்கும்.
(2) அச்சொல் மூவசைச் சீராக இருக்கும்.
(உ-ம்)"கெடுப்பதூஉம் கெட்டார்க்கு" என்ற தொடரில் "து" எனும் குறில் "தூ" என நெடிலாகி அளபெடுத்துள்ளது.
                                                      3.            சொல்லிசை அளபெடை:
          செய்யுளில் ஓசை குன்றாதபோது, ஒருசொல் மற்றொரு சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை எனப்படும்.
எளியவழி:
(1)
"இ" எனும் உயிரெழுத்தில் முடிந்தாலது சொல்லிசை அளபெடையே.
(2) உயிரெழுத்தை நீக்கிச் சொல்லைப் பார்த்தால், அது ஓரசைச் சீராக இருக்கும்.
(உ-ம்) "உரன் நசைஇ உள்ளம் துணையாக" என்னும் தொடரில் "நசை" எனும் சொல்லில் "சைஇ" என்று வினையெச்சமாக வந்து அளபெடுத்துள்ளது.

ஒற்றள பெடை:-
          செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்யும் பொருட்டு சொல்லிலுள்ள மெய்யெழுத்துகள் அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பது ஒற்றளபெடை என்றழைக்கப்படும்:-

§  (உ-ம்)
"இலங்ங்கு வெண்பிறை" - (இடையில் வந்தது)
"கலங்ங்கு நெஞ்சம்" - (இடையில் வந்தது)
"விடங்ங் கலந்தானை" - (இறுதியில் வந்தது)

வெள்ளி, 13 ஜூலை, 2012

TNPSC - சங்க இலக்கிய திணைகள்


தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை.
தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ள படி,
மொழியியல் திணைகள், உயர்திணை மற்றும் அஃறிணைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

பொருளியல் திணைகள், அகத்திணை மற்றும் புறத்திணைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை, புறத்திணை எனும் இரு வகைகளுக்குள் அடங்குகின்றன.

திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள். பாட்டுக்கு உரிய தலைவர்களின் ஒழுக்கத்தை பாடல் பொருளாக பாடுவதை திணை என்றார்கள்.

புறத்திணை - அகத்திணை:

புறத்திணை - பழந் தமிழர் வாழ்வியலில் போர், அரசியல் முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம் புறத்திணை என வழங்கப்படுகின்றது

அகத்திணை - ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை என்கின்றன.


ஐந்நிலம்

பண்டைத்தமிழகத்தில் நிலப்பரப்புகள் 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

     குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும்

     முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும்

     மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்

     நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும்

     பாலை - முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து வெம்மையுற்ற‌ நிலம்

ஐந்து ஒழுக்கங்கள்:

     குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்)

     முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்து இருத்தல்)

     மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்

     நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்)

     பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

ஐந்திணை:

வகைப்படுத்தப்பட்ட நிலம் 5, வகைப்படுத்தப்பட்ட ஒழுக்கம் 5, - ஆகியவற்றின் திணிவுகளை ஐந்திணை என்கிறோம்.

அகத்திணைப் பிரிவுகள்:
குறிஞ்சித் திணை
முல்லைத் திணை
மருதத் திணை
நெய்தல் திணை
பாலைத் திணை
பெருந்திணை
கைக்கிளைத் திணை
   இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை.

      ஏனைய ஐந்தும், நிலத்திணைகளுடன் இணைத்துப் பெயர் இடப்பட்டிருப்பதைக் காணலாம். அகவாழ்வின் அம்சங்களாகத் தமிழ் இலக்கியங்கள் காணும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை ஒவ்வொன்றும் ஐவகை நிலத்திணைகளில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பானவையாகக் கொண்டு இலக்கியம் செய்யப்படுதல் அக்கால வழக்கம்.

குறிஞ்சித்திணை:

குறிஞ்சியாவது, 'மலையும் மலைசார்ந்த இடங்களும்', இயற்கை அழகும், வளங்களும் நிறைந்தனவாக, இளம் பருவத்தாரிடையே 'புணர்தலும் புணர்தல் நிமித்தமும்' செல்லவும், இவைபற்றி எல்லாம் நினைக்கவும், அணுக்கரிடையே (தமக்கு நெருக்கமானவர்) தம் உணர்வை எடுத்து கூறவும் பொருந்துவனவாக அமைந்திருக்கும் நிலப்பகுதிகள்.
எனவே, தனித்து வேட்டை மேல் செல்லும் இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்று ஒன்றுபடுவதற்கு ஏற்ற நிலைக்களமாகி, இந்த துணிவு நிகழ்வதற்கு ஏற்ற வாழ்வியல் அமைந்தது குறிஞ்சி ஆகும்
குறிஞ்சித்திணைக்கு கூதிர்காலம் மற்றும் முன்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும் யாமம் சிறுபொழுதாகவும் அமையும்.
குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது"

முல்லைத்திணை:

முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலங்களும் ஆகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல், ஆடவர் ஆனிரை (பசுக்கள்) மேய்த்தற்கு பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல், மகளிர் பால், பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும்.
 ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக, 'இருத்தல், இருத்தல் நிமித்தம்' முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர்.
முல்லைத்திணைக்கு கார் காலம் பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழுதாகவும் அமையும்
முல்லைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "வினைமுடிந்து மீளூம் தலைவன் தேர்ப்பாகற்கு சொல்லியது"

மருதத்திணை:

மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும். இவை வளமான செந்நெல் விளையும் பகுதி என்பதால், இங்கே உழுவித்து உண்ணும் பெரும் செல்வர் வாழ்வது இயல்பு. இவர்கள் தம் வளமையால் காமத்தில் எளியராகி பரத்தமை மேற்கொள்ளுதல் நிகழ்வதாகும்.

இதனால் தலைவியர்க்கு 'ஊடலும் ஊடல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சுக்களும் இயல்பாகும். இது குறித்தே ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திணைக்கு உரித்தாக்கினார்கள்.

மருதத்திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் விடியல் சிறுபொழுதாகவும் அமையும்.
மருதத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பரத்தையின் பிரிந்து வந்த தலைமகனுக்கு கிழத்தி சொல்லியது"

நெய்தல்திணை:

கடலும் கடல் சார்ந்த பகுதிகள் நெய்தலுக்கு நிலமாகும். மீன் வளம் நாடி கடலிலே திமில் ஏறி செலவது பெரும்பாலும் ஆடவர் தொழில் ஆதலின் அவர் குறித்த பொழுதில் திரும்பாத போது 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சும் இந்நிலத்துக்கு இயல்பாயின.

நெய்தல் திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் எற்பாடு (பிற்பகல்) சிறுபொழுதாகவும் அமையும்.
நெய்தல்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் வந்த தலைவன் சிறைப்புறத்தான் ஆக தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய் தலைமகனுக்கு சொல்லியது"

பாலைத்திணை:

பாலைக்கு என்று தனி நிலம் இல்லை. ஆனால் முல்லயும் குறிஞ்சியும் முறை முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என்பது ஆகும். இதனால், காதலர் இடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் பாலைக்கு உரிமை படுத்தினர்.

ஆறலை கள்வரும், கொலையும் துன்பமும் வெம்மையும் இந்நிலத்துக்கு உரிய தன்மைகள்.

பாலைத்திணைக்கு வேனில் காலம், மற்றும் பின்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும், நண்பகல் சிறுபொழுதாகவும் அமையும்.
பாலைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பொருள்வயின் பிரிவு கடைக்கூடிய தலைவன் நெஞ்சுக்கு சொல்லியது"
இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும்.

புறத்திணைப் பிரிவுகள்:
வெட்சித் திணை
வஞ்சித் திணை
உழிஞைத் திணை
தும்பைத் திணை
வாகைத் திணை
காஞ்சித் திணை
பாடாண் திணை

புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல்:

      "வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
      வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
      எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
      அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
      பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
      செரு வென்றது வாகையாம்"

வெட்சித் திணை:

ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந் நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறு களவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை

வஞ்சித் திணை:

மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது.

உழிஞைத் திணை:

படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், அக் கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது.

தும்பைத் திணை:

படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுவது.

வாகைத் திணை:

மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுவது

காஞ்சித் திணை:

உலகத்தின் நிலையாமை தொடர்பான கருப்பொருள் கொண்டவை

பாடாண் திணை:

பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது

வியாழன், 12 ஜூலை, 2012

TNPSC தமிழ் இலக்கணம் - அன்பின் ஐந்திணை


அகப்பொருள் இலக்கணத்தில் முதன்மையானதும் சிறப்பானதும் ஐந்திணையேஆகும்.அதுஅன்பின்ஐந்திணை என்றே அழைக்கப்படும். குறிஞ்சி முதலான ஐந்து பெயர்களில் வழங்கப்படும். இவை தலைவன் - தலைவி இருவரது மனம் ஒத்த அன்பை மையமாக வைத்து
வகுக்கப்பட்ட இலக்கணங்கள் ஆகும்.அகவாழ்க்கையில் நிகழும் செயல்பாடுகளை (ஒழுக்கங்களை) ஐந்து பெரும் பிரிவுகளில் அடக்கி, அவற்றுக்கு நில அடிப்படையில்
குறிஞ்சி முதலான பெயர்களை அமைத்தனர். அவ்வாறு வகுக்கப்பட்ட ஐந்திணைகளுக்கும் அடிப்படையாக அமையும் பொருள்களை முதற்பொருள்,    கருப்பொருள்,  உரிப்பொருள் என மூவகைப்படுத்துவர்.

ஐந்திணை முப்பொருள்

 ஐந்திணைஒழுக்கத்தோடுதொடர்புடையஉலகப்பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்று பாகுபாடுகளில் அடக்கிக் கூறுவர்.

முதற்பொருள்

முதன்மையும் அடிப்படையுமான பொருள் முதற்பொருள்
எனப்பட்டது. ‘மலை’ முதலான நிலங்களும் ‘மாலை முதலான பொழுதுகளும் முதற்பொருளாகும். ஆகவே, முதற்பொருள் நிலம், பொழுது என இருவகைப்பட்டது.

 கருப்பொருள்

ஒவ்வொரு நிலத்தையும் சார்ந்து - அங்கு விளங்கும், வாழும், திகழும் பொருள்கள் யாவும் கருப்பொருள்களே. இலக்கண நூல்களில் கருப்பொருள்கள் 14 என வரையறுக்கப்பட்டுள்ளன. தெய்வம், உணவு, பறவை, விலங்கு, தொழில், பண் முதலியன இவற்றுள் அடங்கும்.

உரிப்பொருள்

ஒவ்வொரு நிலத்து மக்களும் நிகழ்த்தும் ‘ஒழுக்கம்’
உரிப்பொருள் ஆகிறது. ஒரு நிலம் சார்ந்து அங்குள்ள
கருப்பொருள்களை அடிப்படையாக வைத்துப் பாடப்பெறும்
பாடல்களில் அந்த நிலத்துக்குரிய ஒழுக்கமும் இடம்பெறும்.
அவ்வொழுக்கம் தலைவனும் தலைவியும் சேர்ந்திருக்கும்
‘புணர்ச்சி’யும் அதன் நிமித்தமும் (காரணம்) - முதலாக ஐந்து வகைப்படும். இவற்றின் விளக்கத்தை நீங்கள் அட்டவணையில் காணலாம்.

ஐந்திணை முப்பொருள் விளக்க அட்டவணை

 ஐந்து திணைகளுக்கும் உரிய முப்பொருள்களை ஒருங்கு
தொகுத்துக் காட்டுவதாகக் கீழ்வரும் அட்டவணைஅமைகிறது.


வ.

ண்
திணை
முதற்பொருள்
கருப் பொருள்கள்
உரிப் பொருள்கள்
நிலம்
பொழுது



1.



குறிஞ்சி



மலையும்
மலை
சார்ந்த
நிலமும்
சிறு 
பொழுது

நள்ளிரவு
பெரும் 
பொழுது

குளிர்காலம்



முருகன், 
குறவன்,
 
கிளி,
 
மயில்,
 
புலி,
 
அருவிநீர்,
 
சந்தன
 
மரம்,
தினை
 
அரிசி,
 
வெறியாடல்

புணர்தலும்
புணர்தல்
நிமித்தமும்
(நிமித்தம்= 
காரணம்;
புணர்தல்
=
ஒன்று
 
சேர்தல்)

2.

முல்லை

காடும்
காடு
சார்ந்த
நிலமும்

மாலை

மழைக்
 
காலம்

திருமால்,
 
ஆயர்,
 
காட்டுக்
கோழி,
 
மான்,
 
முயல்,
 
காட்டாறு,
 
ஆடு,
 
வரகு,
குழலூதுதல்,
ஏறு தழுவுதல்.

இருத்தலும்
இருத்தல்
 
நிமித்தமும்
(இருத்தல்=
பிரிவைப்
 
பொறுத்து
 
இருத்தல்)

3.

மருதம்

வயலும்
வயல்
சார்ந்த
நிலமும்

வைகறை

கார்காலம்
 
முதலான
 
எல்லாக்
 
காலமும்
 
உரியது.

இந்திரன்,
 
உழவன்,
 
அன்னம்,
 
எருமை,
 
ஆறு,
 
கிணறு,
 
தாமரை,
 
நெல்.
 
அரிசி,
 
உழவு.

ஊடலும் 
ஊடல்
 
நிமித்தமும்
(ஊடல்=
தலைவி,
 
தலைவன்
 
மீது கோபம்
 
கொள்-
 
ளுதல்)

4.

நெய்தல்

கடலும்
கடல்
சார்ந்த
பகுதியும்

பிற்பகல்
 
(சூரியன்
 
மறையும்
 
நேரம்)

கார்காலம்
 
முதலான
 
எல்லாக்
 
காலமும்
 
உரியது.

வருணன்,
 
பரதவர்,
 
கடற்காகம்,
 
சுறா மீன்,
 
பாக்கம்,
 
உவர்நீர்க்
கேணி,
 
தாழைமலர்,
 
மீனும்
 
உப்பும்
 
விற்றல்,
 
கடல்
 
ஆடல்.

இரங்கலும்
இரங்கல்
 
நிமித்தமும்
(இரங்கல்=
பிரிவு
 
தாங்காது
 
தலைவி
 
வருந்துதல்)

5.

பாலை

வறண்ட
மணற்
பகுதி
மணலும்
மணல்
சார்ந்த
பகுதி-
யும்.

நண்பகல்

வேனிற்
 
காலம்

கொற்றவை,
 
எயினர்,
 
மறவர்,
 
புறா,
 
பருந்து,
 
செந்நாய்,
 
குராசு மலர்,
 
வழிப்பறி,
 
பகற் சூறை.

பிரிதலும் 
பிரிதல்
 
நிமித்தமும்
(பிரிதல்=
தலைவன்
 
தலைவியைப்
பிரிதல்)
பிரிவும்
 
அதை
 
ஒட்டிய
 
செயல்பாடு-
களும்

TNPSC தமிழ் இலக்கணம் - எட்டுத்தொகை


ஐங்குறுநூறு (500 பாடல்கள், 5 புலவர்கள்)
குறுந்தொகை (401 பாடல்கள், 205 புலவர்கள்)
நற்றிணை (400 பாடல்கள், 175 புலவர்கள்)
அகநானூறு (400 பாடல்கள், பலர்)
புறநானூறு (400 பாடல்கள், பலர்)

கலித்தொகை (150 பாடல்கள், ஐவர்)
பதிற்றுப்பத்து (80 பாடல்கள், 10 புலவர்கள்)
பரிபாடல் (22 புலவர்கள்)

1. ஐங்குறுநூறு:

ஐங்குறுநூறு பாடல்கள் மொத்தம் 500, இவற்றுள் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் பாடலும், பிரிவுகளும்:

   " மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
    கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
    பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
    நூலையோ தைங்குறு நூறு"

மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்

2. குறுந்தொகை:

மொத்தமுள்ள 401 பாடல்களில் 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல் களைப் பாடியவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

எளிய சொல்லாட்சியும் குறைந்த அடிகளும் உடையது. இவை 4 முதல் 8 அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.  இப்பாடல்களை பூரிக்கோ என்பர் தொகுத்தளித்துள்ளார்.

சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ”நல்ல குறுந்தொகை” என்று பாராட்டப்பட்ட நூல் குறுந்தொகை. . அகப்பொருளை இனிய காட்சிகளாக்கி விளக்கும் அழகிய இலக்கியம். தமிழரின் பண்பட்ட காதல் வாழ்வைப் பகரும் கவினுறு இலக்கியம்.

3. நற்றிணை:

நற்றிணை தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. மொத்தம் 400 பாடல்களைக் கொண்டுள்ளதால் இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். தொகுத்தளித்தவர் பெயர் கிடைக்கப் பெறவில்லை.
நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.
இவை 9 முதல் 12 அடிகள் கொண்டு 192 (To be confirmed 175) புலவர்களால் பாடப்பெற்றவையாகும்.
இவற்றில் 238 வது பாடல் 8 அடிகளுடனும், ஒரு சில பாடல்கள் ((64, 110, 221, 241, 372, 379, 393) 13 அடிகளுடன் உள்ளன.
இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

4. அகநானூறு:

இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் 400 பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது.  அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.
இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.
இந்த 400 பாடல்கள் களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன.
ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை.
இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை.
இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை.
இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை.
இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.
இத்தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார்.

களிற்றியானைநிரை:

1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

மணிமிடை பவளம்:

121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

நித்திலக் கோவை:

181 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

5. புறநானூறு:

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும்.
இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவற்றுள் 10 பெண் புலவர்களும் அடங்குவர்.
போராசிரியர் ஜோர்ஜ் எல்.ஹார்ட் என்பவரால் புறநானூறு "The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru" எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

6. கலித்தொகை:

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். 150 பாடல்கள் கொண்ட இத்தொகுப்பு நூல் பல்வேறு புலவர்களால் இயற்றப் பெற்றது.
இவையனைத்தும் அகப்பொருள் பற்றிய பாடல்களாகும். இவை 12 முதல் 80 அடிகளைக் கொண்ட‌து.
கலித்தொகையை முதலில் பதிப்பித்த (1887) சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களின் கருத்துப்படி இந்நூல் முழுமையும் இயற்றியவர் – நல்லந்துவனார்.

கலித்தொகை இரு பாடல்களின் உதவியுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

     பாடல் 1

இன்ன திணையை இன்னார் பாடினார் என்பது:

    "பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
    மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்
    நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்
    கலவிவலார் கண்ட கலி"

கலித்தொகை நூலில் உள்ள பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவன் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ
குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவன் கபிலன்
மருதத்திணைப் பாடல்களைப் பாடியவன் மருதன் இளநாகன்
முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவன் சோழன் நல்லுருத்திரன்
நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவன் நல்லந்துவன்
இந்தத் தொகைநூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடலே அடிப்படை.

     பாடல் 2

இன்னின்ன திணைக்கு உரிய பொருள் இன்னின என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல்

    "போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
    ஆக்கமளி ஊடல் அணிமருதம் - நோக்கொன்றி
    இல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கோநெய்தல்
    புல்லும் கலிமுறைக் கோப்பு"

இதில் சொல்லப்பட்டவை: தலைவன், தலைவி
பிரிதல் போக்கு - பாலை
புணர்தல் - இனிமை தரும் குறிஞ்சி
இன்பத்துக்கு ஆக்கம் தரும் ஊடல் - அருமையான மருதம்
நோக்கம் ஒன்றுபட்டு தலைவி இல்லத்தில் ஆற்றியிருத்தல் - முல்லை
இரங்கிய போக்கு - நெய்தல்

7. பதிற்றுப்பத்து:

பதிற்றுப்பத்து(பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றியதாகும்.
இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். சேர மன்னர்களின் கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் விளக்குகின்றன.

இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன.
முதல் பத்து -
இரண்டாம் பத்து - பாடியவர் குமட்டூர்க் கண்ணனார், பாடப்பெற்றவர் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
மூன்றாம் பத்து - பாடியவர் பாலைக் கௌதமனார், பாடப்பெற்றவர் - இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
நான்காம் பத்து - பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார், பாடப்பெற்றவர் - களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
ஐந்தாம் பத்து - பாடியவர் பரணர், பாடப்பெற்றவர் - கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
ஆறாம் பத்து - பாடியவர் காக்கைபாடினியார் (நச்செள்ளையார்), பாடப்பெற்றவர் - ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஏழாம் பத்து - பாடியவர் கபிலர்,பாடப்பெற்றவர் -    செல்வக் கடுங்கோ வாழியாதன்
எட்டாம் பத்து - பாடியவர் அரிசில், கிழார் - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
ஒன்பதாம் பத்து - பாடியவர் பெருங்குன்றூர்க் கிழார்,  பாடப்பெற்றவர் - குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை
பத்தாம் பத்து  

8. பரிபாடல்:

இதில் மொத்தமுள்ள பாடல்கள் 70, ஏனைய பாடல்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை.

பரிபாடல் பின்வரும் பாடலின் துணைகொண்டு தொகுக்கப்பட்டுள்ளது:

    "திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
    தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
    வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
    செய்யபரி பாடற் றிறம்"

திருமாலுக்கு - 8 பாடல்
செவ்வேளுக்கு (முருகனுக்கு) - 31 பாடல்
காடுகாள் (காட்டில் இருக்கும் கொற்றவைக்கு) - 1 பாடல்
படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு - 26 பாடல்
பெருநகரமாகிய மதுரைக்கு - 4 பாடல்

புதன், 11 ஜூலை, 2012

தமிழ் இலக்கணம் - வினைமுற்று


ஒரு வாக்கியத்தில் குறிப்பிடும் செயல்/ பயநிலை முடிவு பெற்றிருந்தால் அது வினை முற்று என்று வழங்கப்படும்.:-
எடுத்துக் காட்டு:
படித்த மாணவன் - படித்த என்பது மாணவனெனும் பெயரினை சுட்டுவதால் பெயரெச்சம் எனப்படும்.

படித்துச் சென்றான் - படித்து என்பது சென்றானெனும் வினையைச் சுட்டுவதால் வினையெச்சம் எனப்படும்.

மாணவன் படித்தான் - இதில் மாணவன் செய்த செயலை முற்றுபெற சொல்வதால் வினைமுற்று எனப்படும்.
குறிப்பு வினைமுற்று:
          அவன் நல்லவன் - என்பதில் நல்லவன் நல்லவன் என்பது போல காலங்காட்டா வினைமுற்றுகள் உண்டு. அவை குறிப்பு வினைமுற்று எனப்படும். பெயர் அடியாகப் பிறந்து காலம் காட்டாத குறிப்பு வினைமுற்றுகள் கீழ்வருமாறு:- -
எடுத்துக்காட்டு:-

             §   நீர்த்து, உடைத்து, நன்று, இல்லை, வேறு, இனிது, உண்டு, இன்று, மருகனை, உளன்.

மூன்றிடத்தும் பொருந்தும் வினைமுற்றுகள்:-
1.      தன்மை வினைமுற்று:
          உரைத்தனென், இருந்தனென், போற்றுகேன், செய்கேன், நோற்றிலேன், யாத்திலேன், பார்த்தனென் - இவையனைத்தும் தன்மையிடத்தைக் கூறும் தன்மை வினைமுற்றுகளாம்.
2.      தன்மைப் பன்மை வினைமுற்று:
          தேர்ந்திலம், அறிவாம், தெரிதும், ஆற்றுதும் - இவையனைத்தும் தன்மையிடத்தில் வரும் பன்மை வினைமுற்றுகள்.
3.      முன்னிலை ஒருமை வினைமுற்று:
          கொன்றனை, பார்த்தனை, செய்தாய், குடித்தாய், வருதி, இசைத்தி, கேட்டி, கோடி, காண்டி, உரைத்தி, கிடத்தி - இவையனைத்தும் முன்னிலை ஒருமை வினைமுற்றுகளாம்.
4.      முன்னிலைப் பன்மை வினைமுற்று:
          சென்றீர், செல்வீர் - என்பனயாவும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுகளாம்.
5.      படர்க்கை வினைமுற்று:
          படர்க்கையிடத்தில் உள்ள அய்ந்து பால்களிலும் வருபவை படர்க்கை வினைமுற்றுகளாம்.

                  §   எடுத்துக்காட்டு:
"வந்தான் - ஆண்பால்"
"வந்தாள், படித்தாள் - பெண்பால்",
"எய்தின்று, வந்தது, முதற்று, தைத்தன்று - ஒன்றன்பால்",
"முதல், நீர, போன்ற, வந்தன - பலவின்பால்",
"சோகாப்பர், எய்துப, ஆப, உணர்ப, வந்தனர் - பலர்பால்", "

                        எதிர்மறை வினைமுற்று:-
          எதிர்மறைப் பொருளை உணர்த்தும் வினைமுற்றுகளான - நேரா, கடவார், துஞ்சேல், நீங்கா, தெரிந்திலன், அறிகிலேன் - போன்றவை எதிர்மறை வினைமுற்றுகள எனப்படும்.
                        ஏவல் வினைமுற்று:-
          முன்னிலையில் ஆணையிடுவதாக வரும் சொற்கள் ஏவல் வினைமுற்றுகள் எனப்படும்.

o    எடுத்துக்காட்டு:
நட, வா, போ - வெறும் பகுதி மாத்திரம்
தேற்றாய், வருதி - ஆய், இ விகுதியுடைச் சொற்கள்
உண்ணல், உண்ணேல், மறால், உண்ணாதி, உண்ணாதே -
அல், ஆல், ஏல், இ, ஏ விகுதியுடைச் சொற்கள்
பெறுமின், கூறுமின், உண்ணீர், உண்ணும் -
மின், ஈர், உம் - விகுதியுடைச் சொற்கள்

                        வியங்கோள் வினைமுற்று:-
          ஆணையிடுவது போலல்லாமல் வேண்டுகோளைப் போன்று தொனிக்கும் வினைமுற்றுகள் இவை.

o    எடுத்துக்காட்டு:
வாழ்க, நிற்க, தொடங்கற்க - "க" விகுதி
வாழிய - "இய" விகுதி
வாழியர் - "இயர்" விகுதி
எனல் - "அல்" விகுதி
எச்சங்களின் விளக்கம்
          சில நேரங்களில் ஒரு வாக்கியத்தில் இரண்டு வினைமுற்றுகள் இருப்பது போன்று வருவதுண்டு. அதில் முதலில் வரும் வினைமுற்று முற்றெச்சம் என்று வழங்கப்படுகிறது:-
எடுத்துக் காட்டு:
கண்டனன் வணங்கினான்- கண்டனன் என்பது முற்றெச்சம்.
உடையினன் தோன்றினன் - உடையினன் என்பது முற்றெச்சம்.
உவந்தனன் ஏத்தி - உவந்தனன் என்பது முற்றெச்சம்
பெயரெச்சம்
          பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் பெயரெச்சங்களாம்:-

o    எடுத்துக்காட்டு:
உண்ட கண்ணன் - உண்ட என்பது இறந்தகாலம் காட்டும் பெயரெச்சம்
உண்ணுகின்ற பொருள் - உண்ணுகின்ற என்பது நிகழ்காலம் காட்டும் பெயரெச்சம்
உண்ணும் வேளை - உண்ணும் என்பது எதிர்காலம் காட்டும் பெயரெச்சம்
எனல் - "அல்" விகுதி
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
          பெயரெச்ச வகைகளில் "ஆ" என்னும் எழுத்தில் முடிகின்றவையும் எதிர்மறைப் பொருளைத் தருகின்றவையும் அடுத்த சொல்லைப் பெயர்ச்சொல்லாய் கொண்டு முடிபவையும் ஏறக்குறைய ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாகும்:-

o    எடுத்துக்காட்டு:
எய்துவர் எய்தாப் பழி - எய்தா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நாறா மலரனையர் - நாறா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

செவ்வாய், 10 ஜூலை, 2012

TNPSC தமிழ் இலக்கணம் - ப‌த்துப்பாட்டு


சங்க இலக்கியங்களுள் ஒன்றான‌ ப‌த்துப்பாட்டு நூல்களிலுள்ள‌ பாட‌ல்க‌ள் 103 முத‌ல் 782 அடிக‌ளைக் கொண்ட‌ நீள‌மான பாட‌ல்க‌ள். இப்பாடல்களில் குறிஞ்சிப்பாட்டு மட்டும் அகப்பொருள் பற்றிய பாடல்களையும், ஏனைய பிற பாடல்கள் அக‌ம் அல்ல‌து புற‌ம் எனும் குறிப்பிட்ட வ‌கைப்பாட்டிற்குள் சரியாகப் பிரிக்க‌முடியாத‌ப‌டி உள்ள‌ன.


திருமுருகாற்றுப்படை:

     பா அளவை - 317 அடிகள் கொண்ட ஆசிரியப்பா

     பாடியவர் - நக்கீரர்

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - முருகக் கடவுள் திருமுருகாற்றுப்படை:

இது பத்துப்பாட்டு நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுகிற‌து. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது.

மலைப்படுக்கடாம்:

     பா அளவை - 583 அடிகள் கொண்ட ஆசிரியப்பா

     பாடியவர் -  பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - நன்ன‌ன் வெண்மான்


இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் ஆகும். இந்நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர் நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.

முல்லைப்பாட்டு:

     பா அளவை - 103 அடிகள் கொண்ட‌ ஆசிரியப்பா
   
     பாடியவர் - நப்பூதனார்
   
     பாட்டுடைத் த‌லைவ‌ன் - த‌லையான்கால‌த்து செருவென்ற‌ நெடுஞ்செழிய‌ன்

இந்நூல் இத்தொகுதியுள் அடங்கியுள்ள மிகச்சிறிய நூலாகும். இது முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாழாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள்.


மழைக்காலம் வருவதை உணர்த்தும் முல்லைப்பாட்டின் முதற்பாடல்:

 "நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
 வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
 நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
 பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
 கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி"

நெடுநல்வாடை:

     பா அளவை - 188 அடிகள் கொண்ட‌ அகவற்பா

     பாடியவர் - நக்கீரனார்

நூலில் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

இது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுபாணாற்றுப்படை:

     பா அளவை - 269 அடிகள் கொண்ட ஆசிரியப்பா
 
     பாடியவர் - நத்தத்தனார்

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - ந‌ல்லியக்கோட‌ன்


ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பட்டினப்பாலை:

     பா அளவை - 301 அடிகள் கொண்ட அகவற்பா


     பாடியவர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்


     பாட்டுடைத் த‌லைவ‌ன் - சோழன் கரிகாலன்


இந்நூல் பண்டைய சோழ நாட்டின் வாழ்க்கை முறையையும், அதன் செல்வ வளத்தையும் எடுத்துரைக்கின்ற‌து.

குறிஞ்சிப்பாட்டு:

     பா அளவை - 261 அடிகள் கொண்ட ஆசிரியப்பா

     பாடியவர் - கபிலர்

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - பிர‌க‌தத்தா (வ‌ட‌ நாட்டு அர‌ச‌ன்)


இந்நூற்பாடல்கள் அகப்பொருள் சார்ந்த பாடல்களாகும். தினைப்புலம் காக்கச் சென்ற தலைவி ஒரு ஆண் மகனிடம் மனதைப் பறி கொடுக்கிறாள். பல காரணங்களினால் அவனைச் சந்திக்க முடியாமல் தவிக்கும் தலைவியின் நிலையை, அவள் தாய்க்கு எடுத்து விளக்குகிறாள் அவள் தோழி. இதுவே குறிஞ்சிப் பாட்டின் உள்ளடக்கம்.

பொருநாறாற்றுப்படை:

     பா அளவை - 248 அடிகள் கொண்ட ஆசிரியப்பா

     பாடியவர் - முடத்தாமக்கண்ணியார்

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - சோழன் கரிகாலன்


மதுரைக்காஞ்சி:

     பா அளவை - 782 அடிகள் கொண்ட ஆசிரியப்பா

     பாடியவர் - மாங்குடி மருதனார்

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - பாண்டிய‌ன் நெடுஞ்செழிய‌ன்


இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.

போரின் கொடுமையை விளக்குதல்:

பெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார்.

"நாடெனும்பேர் காடுஆக
ஆசேந்தவழி மாசேப்ப
ஊர் இருந்தவழி பாழ்ஆக"

போரினால் நாடாக இருந்த இடம் காடாகும். பசுக்கள் திரிந்த வழியில் புலிகள் உலவும். ஊர் முழுதும் பாழாகும் என்று சொல்கிறார்.

நாளங்காடி அல்லங்காடி:

சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.

"மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது"

இத்துட‌ன் ஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யா‌வற்றையும் மருதனார் கூறுகிறார். குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார்.

பெரும்பாணாற்றுப்படை:

     பா அளவை - 500 அடிகள் கொண்ட ஆசிரியப்பா

     பாடியவர் - உருத்திரங்கண்ணனார்

     பாட்டுடைத் த‌லைவ‌ன் - தொண்டைமான் இளந்திரையன்

பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல்.

தமிழ் இலக்கணம் - ஒற்றுப் பிழைகள் பகுதி 1


வல்லெழுத்து மிகுமிடங்கள்:

           கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும் போது, இரண்டாவது சொல்லின் முதலெழுத்து க், ச், த், ப், முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, ச, சா, த, தா, ப, பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின
மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேரும். இதனையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே. சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பால பிழைகளை நீக்கிவிடலாம். :-
வல்லெழுத்து மிகும் உதாரணங்கள்::-

§  தமிழை + கண்டேன்   = தமிழைக் கண்டேன்.
§  தமிழை + சந்தித்தேன் = தமிழைச் சந்தித்தேன்.
§  தமிழை + தந்தேன்     = தமிழைத் தந்தேன்.
§  தமிழை + பார்த்தேன்  = தமிழைப் பார்த்தேன்.

அதிகமாகப் பிழை செய்யுமிடங்கள்::-
           கீழ்வரும் இடங்களில் பொதுவாக அனைவருமே ஒரு சில சமயங்களில் தவறுகிறோம்:- -

1.      இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = ஐ):-

(உ-ம்)
இலக்கணத்தை + படித்தேன் = இலக்கணத்தைப் படித்தேன்,
இலக்கியத்தை + கண்டேன் = இலக்கியத்தைக் கண்டேன்,
2.      நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = கு):-

(உ-ம்)
தமிழுக்கு + பொன்னாள் = தமிழுக்குப் பொன்னாள்
தேர்வுக்கு + போனான் = தேர்வுக்குப் போனான்
3.      ஏழாம் வேற்றுமை உருபையடுத்து மிகும் (உருபு = இடை):-

(உ-ம்)
நல்லாரிடை + புக்கு = நல்லாரிடைப் புக்கு
4.      ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் மட்டும் மிகும் (உருபு = அது, உடைய):-

(உ-ம்)
யானை + கால் = யானைக்கால் (யானையினது கால்)
5.      இரண்டு, மூன்று, ஐந்து, எழு ஆகிய உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைகளில் மிகும் :-

(உ-ம்)

இரண்டாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மோர் + குடம் = மோர்க் குடம் (மோரை உடைய குடம்)

மூன்றாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மர + கதவு = மரக் கதவு (மரத்தால் ஆன கதவு)

ஐந்தாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மலை + கல் = மலைக் கல் (மலையினின்று வரும் கல்)

ஏழாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
நீர் + செடி = நீர்ச் செடி (நீரின் கண் உள்ள செடி)

பொதுவாக வல்லெழுத்துக்கள் மிகும் சில இடங்கள்::-
           பின்வரும் சொற்களையடுத்து வரும் வல்லெழுத்துகள் மிகும்:- அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி, அங்கு, இங்கு, எங்கு, இனி, தனி, என, மற்ற, மற்று, மற்றை, முன்னர், பின்னர், எல்லா, அவ்வகை, இவ்வகை, எவ்வகை.
(உ-ம்)
§  அந்த + கரண்டி   = அந்தக் கரண்டி.
§  இந்த + சிற்பம் = இந்தச் சிற்பம்.
§  எந்த + பட்டம்     = எந்தப் பட்டம்.
§  அப்படி + போனான்  = அப்படிப் போனான்.
§  இப்படி + பார்த்தான்   = இப்படிப் பார்த்தேன்.
§  எப்படி + கண்டான் = எப்படிக் கண்டான்.
§  அங்கு + சென்றான்     = அங்குச் சென்றான்.
§  இங்கு + தங்கினான்  = இங்குத் தங்கினான்.
§  எங்கு + கண்டாய்  = எங்குக் கண்டாய்.
§  இனி + கேள்  = இனிக் கேள்.
§  தனி + தமிழ்  = தனித் தமிழ்.
§  என + சொன்னாள்  = எனச் சொன்னாள்.
§  மற்று + பாடலாம்  = மற்றுப் பாடலாம்.
§  மற்ற + குதிரைகள்  = மற்றக் குதிரைகள்.
§  மற்றை + கனவு  = மற்றைக் கனவு.
§  முன்னர் + கண்ட  = முன்னர்க் கண்ட.
§  பின்னர் + கேட்ட  = பின்னர்க் கேட்ட.
§  எல்லா + பெண்கள்  = எல்லாப் பெண்கள்.
§  அவ்வகை + சிற்பம்  = அவ்வகைச் சிற்பம்.
§  இவ்வகை + பண்பு  = இவ்வகைப் பண்பு.
§  எவ்வகை + தோற்றம்  = எவ்வகைத் தோற்றம்.

                        வல்லெழுத்து மிகும் மற்றும் சில இடங்கள்:-
          பின்வரும் சொற்களையும், பொருள் தரும் தனி நெடியலையும் அடுத்து மிகும்:-
(உ-ம்)
§  பின்வரும் எழுத்துகளில் வருமொழி, பெயர்ச் சொல்லாக இருந்தால் மட்டுமே மிகும்:-
அ, இ, எ, ய், ர், ழ்
(உ-ம்)
அ + பக்கம் = அப்பக்கம்,
இ + குரல் = இக்குரல்,
நாய் + பாசம் = நாய்ப்பாசம்
தமிழர் + பண்பு = தமிழர்ப் பண்பு
தமிழ் + பயன் = தமிழ்ப் பயன்
§  ஓரெழுத்தொரு மொழி:-
தீ, பூ, ஈ
(உ-ம்)
தீ + கனல் = தீக்கனல்,
பூ + சரம் = பூச்சரம்,
ஈ + பண்டம் = ஈப்பண்டம்
§  உவமைத் தொகை:-

(உ-ம்)
மதி + குடை= மதிக் குடை (மதியொத்தக் குடை)
§  பண்புத் தொகை:-

(உ-ம்)
புது+ பெண்= புதுப்பெண்(புதுமையான பெண்)
§  "த்து" என்று முடியும் சொற்களையடுத்து:-

(உ-ம்)
பார்த்து + போனான் = பார்த்துப் போனான்
காத்து + கிடந்தான் = காத்துக் கிடந்தான்
§  ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அடுத்து:-

(உ-ம்)
பாடா + கிளி= பாடாக் கிளி (பாடாத கிளி)
ஒடா + தேர் = ஒடாத் தேர் (ஓடாத தேர்)
§  இரு பெயரொட்டுப் பண்புத்தொகை அடுத்து:-

(உ-ம்)
சாரை + பாம்பு = சாரைப் பாம்பு
மருத்துவ + கல்வி = மருத்துவக் கல்வி

                        வினையெச்சங்களில் ஒற்று:-
          பின்வரும் சொற்கள் வினையெச்சங்களாக வந்தால் மட்டுமே ஒற்று மிகும்.
(உ-ம்) ஆக, ஆய், போய், அன்றி, இன்றி, போல்
(உ-ம்)
§  நன்றாக + பாடினாள்  = நன்றாகப் பாடினாள்.
§  ஓடுவதாய் + சொன்னான் = ஓடுவதாய்ச் சொன்னான்.
§  போய் + செய்     = போய்ச் செய்.
§  அன்றி + சொல்லான் = அன்றிச் சொல்லான்.
§  இன்றி + போவான்  = இன்றிப் போவான்.
§  போல + செய்= போலச் செய்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More